பெரிய ஆண்டாங்கோவில் பூங்கா சீரமைக்கப்படுமா?
கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. மேலும் அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளது. எனவே பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூங்கா
கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இதில் அம்மா உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி மேற்கொள்ள எட்டு வடிவில் தளம், பூங்காவை சுற்றி நடைபயிற்சி தளம், கழிப்பிடம், சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன. இதனையடுத்து பெரிய ஆண்டாங்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் அதிகளவில் வந்து சென்றனர்.
இப்பூங்காவில் அதிகளவிலான உடற்பயிற்சி பொருட்கள் இருந்ததால் காலை மற்றும் மாலை நேரங்களில் இளைஞர்கள் அதிகளவில் வந்து உடற்பயிற்சி செய்து வந்தனர். சிறுவர்கள் விளையாட கூடிய வகையில் ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதில் சிறுவர், சிறுமிகள் மாலை நேரங்களில் வந்து விளையாடி மகிழ்ந்து வந்தனர். முதியவர்கள் வாக்கிங் செல்வதற்கு நடைபயிற்சி தளம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
சீரமைக்க வேண்டும்
ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகள் குவிந்திருந்தன். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பூங்கா பராமரிப்பு இல்லாமல் முட்புதர், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. கழிப்பிடமும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகள் பூங்காவுக்கு செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உடற்பயிற்சி பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
கரூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக உள்ளதால், இதுபோன்ற பூங்காவிற்கு சென்று பொதுமக்கள் தங்களது நேரங்களை செலவிட்டு வந்தனர். தற்போது இந்த பூங்காவும் பராமரிக்காமல் உள்ளது.- எனவே பெரிய ஆண்டாங்கோவில் பூங்காவில் உள்ள செடிகளை சுத்தம் செய்தும், பழுதடைந்த உடற்பயிற்சி உபகரணங்களை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
சிரமமாக இருக்கிறது
ஹனீபா:- பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் பூங்கா திறக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் பூங்காவிற்கு வந்து நேரத்தை செலவிட்டு சென்றனர். உடற்பயிற்சி கூடத்தில் ஏராளமான இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர். மேலும் எங்களது குழந்தைகளும் பூங்கா சென்று அவர்களுக்கு பிடித்த ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வந்தனர்.
விடுமுறை காலங்களில் அதிகளவிலான சிறுவர், சிறுமிகள் வந்து விளையாடி மகிழ்ந்து சென்றனர். இந்த பூங்கா பராமரிக்காமல் இருப்பது எங்களுக்கு சிரமமாக தான் இருக்கிறது. எனவே இந்த பூங்காவை விரைவில் சீரமைக்க வேண்டும். இந்த பூங்காவிற்கு வருபவர்களிடம் மிக குறைந்த அளவில் கட்டணம் பெற்று பூங்காவை தினமும் பராமரித்து வந்தால் நன்றாக இருக்கும். மிக குறைந்த கட்டணம் செலுத்துவதால் யாருக்கும் எந்தவிதமான சிரமமும் இருக்காது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கிற்கான சிறந்த இடமாக மீண்டும் மாற வேண்டும், என்றார்.
பயமாக உள்ளது
சங்கீதா:- வீட்டின் அருகில் பூங்கா திறக்கப்பட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளும் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். விடுமுறை நாட்களில் குழந்தைகளை அழைத்து வந்தால் அவர்கள் சந்தோஷமாக இந்த பூங்காவில் சுற்றிவந்து விளையாடி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பூங்கா பராமரிக்காமல் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து வருவதற்கு சற்று பயமாக இருக்கிறது. கரூரில் பொழுதுபோக்கிற்கான அம்சம் குறைவாக உள்ளது.
எனவே இந்த பூங்கா சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களை பழுது பார்க்க வேண்டும். இந்த கோடை விடுமுறையில் பூங்கா பராமரிக்கப்பட்டு இருந்தால் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக வந்து விளையாடி மகிழ்ந்து சென்று இருப்பார்கள், ஆனால் தற்போது பராமரிப்பு இல்லாததால் கோடை விடுமுறையில் குழந்தைகள் விளையாட நிலை ஏற்பட்டுவிட்டது.
உபகரணங்கள் பழுது
கந்தசாமி:- எங்கள் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பூங்கா இருந்தது. இளைஞர்கள் வெளிப் பகுதியில் ஜிம்மிற்கு சென்று பணம் செலுத்தி உடற்பயிற்சி செய்யும் நிலை இருந்தது. ஆனால் இந்த பூங்கா திறந்தபோது ஏராளமான இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர். அதைபோல் சிறுவர், சிறுமிகள் மாலை நேரங்களில் பெற்றோர்களுடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர்.
தற்போது பராமரிப்பு இல்லாமல் இந்த பூங்க செடி, கொடிகள் முளைத்தும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இதனால் உடனடியாக இந்த பூங்கா சீரமைத்து பராமரிக்க வேண்டும். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைப்பயிற்சி தளம், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த வசதிகளை மீண்டும் பெறுவதற்கு பூங்காவை சீரமைக்க வேண்டும். மேலும் இதுபோன்று மீண்டும் பழுதடையாமல் இருக்க, தொடர்ந்து பூங்கா பராமரித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.