சிவகாசி மேற்கு பகுதியில் புறக்காவல் நிலையம் தொடங்கப்படுமா?

சிவகாசி மேற்கு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-08 22:33 GMT

சிவகாசி, 

சிவகாசி மேற்கு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு பகுதி

சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு உள்ள பகுதிகள் சிவகாசி டவுன், திருத்தங்கல், மாரனேரி, மல்லி ஆகிய போலீஸ் நிலைங்களின் எல்லைகள் வருகிறது. இந்தபகுதியில் அதிக அளவில் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை குறி வைத்து மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் முயற்சி செய்தும் உரிய பலன் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் முன்விரோத தகராறு அதிக அளவில் நடந்து வருகிறது. பல சம்பவங்கள் போலீசார் கவனத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில சம்பவங்கள் போலீசார் கவனத்துக்கு வராமல் போகிறது.

கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பகுதியை சேர்ந்த 2 கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்தகராறு கடைசியில் கொலையில் முடிந்தது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசாரின் ரோந்து பணி முற்றிலுமாக இல்லை. ஏற்கனவே இந்த பகுதியில் கொலை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் தற்போது முன்விரோத கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இந்த பகுதியில் புறக்காவல் நிலையத்தை தொடங்கி போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இப்பகுதிக்கு வரும் வாகனங்களையும், நபர்களையும் கண்காணிக்க வேண்டும். குற்ற சம்பவம் நடந்த பின்னர் 10-க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதை விட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்