கிராமப்புற மக்களின் குடிநீர் தேவை தன்னிறைவு பெறுமா?

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் கிராமப்புற மக்களின் குடிநீர்த்தேவை தன்னிறைவு பெறுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-11 17:47 GMT

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் கிராமப்புற மக்களின் குடிநீர்த்தேவை தன்னிறைவு பெறுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் குடிநீர் வசதியும் ஒன்றாகும். தண்ணீர் இயற்கையின் அருட்கொடை என்றாலும் அதனை மக்களிடையே கொண்டுபோய் சேர்ப்பது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பாகும். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய் இணைப்புகள் மூலம் வழங்குவதற்காக 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டம் மத்திய அரசின் 50 சதவீத பங்களிப்பு, மாநில அரசின் 50 சதவீத பங்களிப்பு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் குடிநீர் குழாய் இணைப்பு மூலம் தினமும் ஒவ்வொரு தனி நபருக்கும் 55 லிட்டர் என்ற தேவையான அளவு வரையறுக்கப்பட்ட தரத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதே ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் நோக்கமாகும்.

860 ஊராட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 860 ஊராட்சிகளில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 110 குடியிருப்புகள் உள்ளன. அதில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 1,277 குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் முறைப்படுத்தப்பட்டது. 2020-21-ம் நிதி ஆண்டில் முதல் கட்டமாக ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 306 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 1,359 குக்கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ரூ.82 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 194 தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.

மேலும் ஜல் ஜீவன் மிஷன் ஒருங்கிணைப்பு நிதி 2020-21-ன் கீழ் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 193 ஊராட்சிகளில் 1,576 குடியிருப்புகளுக்கு ரூ.54 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 64 ஆயிரத்து 522 தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

10 சதவீதம் மக்கள் பங்களிப்பு

ஜல் ஜீவன் மிஷன் திட்ட ஒருங்கிணைப்பு நிதி 2021-22-ன் கீழ் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 1,422 குடியிருப்புகளுக்கு ரூ.53 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 54 ஆயிரத்து 603 குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் செயல்படுத்திட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் 2022-23-ம் நிதி ஆண்டுக்கு 56 ஊராட்சிகளில் 217 குக்கிரமங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ரூ.11 கோடியே 85 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் 18 ஆயிரத்து 426 தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் செயல்படுத்திட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 1 லட்சத்து 76 ஆயிரத்து 88 குடியிருப்புகளுக்கு 2022-23-ம் நிதி ஆண்டில் தனி நபர் குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மொத்த நிதி ஒதுக்கீட்டில் மொத்த செலவுத் தொகையில் 10 சதவீதம் பொதுமக்கள் சமூக பங்களிப்புத் தொகையாக வசூல் செய்து பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

136 கிராம ஊராட்சிகள் தன்னிறைவு

இந்தத் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகத்திற்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 247 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள 2,122 குக்கிராமங்களில் 2,12,528 வீடுகள் உள்ளன. இவற்றில் 94 ஆயிரத்து 813 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.

எனவே மீதமுள்ள 1,17,715 வீடுகளுக்கு குடிநீர் ஆதாரம் இருக்கும் இடத்தில் இருந்து ஆழ்துளை கிணறு வாயிலாக மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மூலம் நீர் ஏற்றி ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் பொருத்தி குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020-21-ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட நிதியின் கீழ் 112 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 96 குக்கிராமங்களில் உள்ள 46,532 வீடுகளுக்கு ரூ.62 கோடியே 52 லட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிப்பதற்கு குடிநீர் வழங்கப்பட்டது.

தற்போது வேலூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தை ஒருங்கிணைத்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதில் 136 கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெற்றுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட 136 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 2-வது இடம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா, சோளிங்கர், காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம் ஆகிய 7 ஒன்றியங்களில் 288 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 1,593 குக்கிராமங்கள் இருக்கிறது. 1 லட்சத்து 89 ஆயிரத்து 324 குடியிருப்புகள் உள்ளன.

மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தற்போது வரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 772 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 2,552 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 40 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 81 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ராணிப்பேட்டை மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தில் உள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, மாதனூர் ஆகிய 6 ஒன்றியங்களில் 208 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 132 குடியிருப்புகள் உள்ளது. இதில் 2020-21-ம் ஆண்டில் 28,512 வீடுகளுக்கும், 2021-22-ம் நிதியாண்டில் 9,000 வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டில் தற்போது வரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 30 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் 51,102 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். இதில் 15-வது நிதிக் குழு மானியத்தில் 6,192 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 44 ஆயிரத்து 910 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விடும்.

பொதுமக்கள் கருத்து

இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து வருமாறு:-

குடியாத்தம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நீலாவதி (வயது 55) கூறியதாவது:-

தினமும் காலையில் ஒரு மணி நேரம் குடிநீர் வழங்குகிறார்கள். கடந்த ஆறு மாதமாக குடிநீர் வருகிறது. இதனால் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை என்பது கிடையாது என்றார்.

மற்றொரு பயனாளி நிரோஷா கூறியதாவது:-

தினமும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குகிறார்கள். அதுவும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீருக்காக அலைந்து திரிந்த காலம் போய் வீட்டிலேயே குடிநீர் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மேலும் அதேகிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், காலை 7 மணி முதல் 8 மணி வரை குடிநீர் வழங்குவதை, காலை 6 மணிக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் குடிநீர் பிடித்து விட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். அதேபோல் மாலையிலும் ஒரு மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும். இதனால் காலையில் குடிநீர் பிடிக்காமல் வேலைக்கு சென்று விட்டவர்களுக்கு மாலையில் குடிநீர் பிடிக்க வசதியாக இருக்கும் என்றனர்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க வேண்டும்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாச்சல் ஊராட்சியில் உள்ள துரைநகர் பகுதியை சேர்ந்த சுபாஷினி கூறியதாவது:-

இத்திட்டம் சிறப்பான திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் ஒரே அளவில் குடிநீர் கிடைக்கிறது. யாரும் மின்மோட்டார் வைத்து குடிநீரை முறைகேடாக எடுக்க முடியாது. அப்படி எடுக்க முயன்றால் அந்த வீட்டிற்கு குடிநீரே கிடைக்காத அளவுக்கு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அதனை ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கினால் நன்றாக இருக்கும்.

இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தொகையினை அரசே செலுத்த முன்வரவேண்டும். பழைய குடிநீர் குழாய் இணைப்பு முறையில் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் மாறி மாறி வரும். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. ஆனால் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை என்று கூறினார்.

அரசே செலுத்த வேண்டும்

ஜல்ஜீவன் திட்டம் குறித்து வாலாஜா தாலுகா வேப்பூர் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா கூறியதாவது:-

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் என்னுடைய வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கினார்கள். இதற்கு முன்பு சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வந்தோம். இத்திட்டத்தின் மூலம் வீட்டிலேயே குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது.

திட்டத்திற்கு வைப்புத் தொகையாக ரூ.1000, வரி ரூ.600 ஆக மொத்தம் ரூ.1600 கட்ட வேண்டும். கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் என்னால் இந்த தொகையை உடனடியாக கட்ட முடியவில்லை. இருப்பினும் எனக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி உள்ளார்கள். மேலும் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராமு எங்கள் பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்குகிறார். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்கிறார். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு இது ஒரு பயனுள்ள திட்டம் ஆகும்.

கட்டி முடிக்கப்படாத மேல்நிைல நீர்த்தேக்க தொட்டி

வேட்டவலம் அருகே அணுக்குமலை ஊராட்சிக்குட்பட்ட பொன்னமேடு கிராமம், ரத்னா நகர் பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 2020-2021-ம் ஆண்டு ரூ.19 லட்சம் மதிப்பில் புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தனிநபர் குடிநீர் இணைப்பு, பைப்லைன் விஸ்தரிப்பு ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. இந்த பணிகள் முடிவடையாததால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஏழுமலை கூறுகையில், ரத்னா நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கன்னியப்பன் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதால் குடிதண்ணீர் மற்றும் அத்யாவசிய தேவைக்கு அருகே உள்ள நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். இரவு நேரங்களில் மற்றும் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே பாதியில் நின்ற பணியை சரி செய்து உடனே தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.

வெள்ளேரி ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி ஊராட்சியில் உள்ள 403 வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியத்துடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக வெள்ளேரி ஊராட்சி அறிவிக்கப்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த திட்டம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை. பொதுமக்களும் இதனை ஏற்க மறுக்கின்றனர். ஏனென்றால் குடிநீர் வினியோகம் செய்வதற்காக மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு ½ இஞ்ச்் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களிடையே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 55 லிட்டர் என்பது வெறும் 3 குடம் தண்ணீர் தான். 3 குடம் தண்ணீரை வைத்து என்ன செய்ய முடியும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள வட மாநிலங்களில் வேண்டும் என்றால் இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். இங்கு மக்கள் தண்ணீரை தாராளமாக செலவு செய்து பழகி விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே குறைந்த அளவில் தண்ணீர் கொடுத்து பழக்கப்படுத்தி வைத்திருந்தால் பரவாயில்லை. தற்போது குறைத்து வழங்குவதால் தேவையற்ற பிரச்சினைகள் தான் ஏற்படுகின்றது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்