சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-10-08 18:45 GMT

வேலைவாய்ப்பு அலுவலகம்

திருவாரூர் விளமல்-மன்னார்குடி சாலையில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் அருகில் உள்ள பிரிவு சாலையில் வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருந்து கிடங்கு மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன.

இந்த வழியாக ஆர்.வி.எல். நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் என நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்ற பகுதியாக இருந்து வருகிறது.

டாஸ்மாக் கிடங்கு

குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு படித்த மாணவ-மாணவிகள் தங்களது கல்வி தகுதியை பதிவு செய்வதற்கும், பதிவு மூப்பு மற்றும் வேலை வாய்ப்பு மூலம் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு போன்ற பல பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர்.

இந்த சாலையில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் கிடங்கு அமைந்துள்ளது. இதனால் ஏராளமான லாரிகள் இங்கு வந்து மது பாட்டில்களை ஏற்றி கொண்டு செல்கிறது.

சேதமடைந்த சாலை

இந்த லாரிகள் அனைத்தும் கிடங்கு செல்லும் சாலையில் அணிவகுத்து நிற்பது வழக்கம். இந்த கிடங்கில் இருந்து நாள்தோறும் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை வேன்களும் ஏற்றி செல்கின்றன. மேலும் மருத்துவ கிடங்கிற்கும் மருந்துகளை ஏற்றி கொண்டு லாரிகள், இங்கிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் மருந்துகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் என வாகன போக்குவரத்து மிகுந்த வழிபாதையாகவும் இருந்து வருகிறது. இந்த சாலை செம்மண் கப்பி சாலையாக இருந்து வரும் நிலையில் அதிக கனரக வாகன போக்குவரத்து காரணமாக இந்த சாலை மிகவும் சேதமடைந்து பெரிய பள்ளங்களுடன் காட்சி அளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மேலும் இந்த சாலை, சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தார்ச்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்