கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்

கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-14 09:06 GMT

திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் கிராமத்தில் உள்ள கால்வாயின் குறுக்கே, மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவும் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் ரூ.6 லட்சம் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. ராமாபுரம், சீதாபுரம் கிராமங்கள் வழியாக கால்வாயில் வரும் மழைநீர், தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு வந்தது.

கால்வாயில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது. இந்நிலையில், மேற்கண்ட தடுப்பணை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. ஆங்காங்கே தடுப்பணையில் ஓட்டை விழுந்துள்ளதால், மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேங்க வழியின்றி உடைப்பு மற்றும் ஓட்டைகள் வழியாக வெளியேறி விடுகிறது.

தடுப்பணை பகுதியில் மழைக்காலத்தில் மட்டும் நீர் இருப்பதாகவும் மற்ற காலங்களில் தண்ணீர் இன்றி கால்வாய் வறண்டு கிடக்கிறது. இதனால் அருகில் குடிநீர் தேவைக்காக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் பாதித்துள்ளது.

தடுப்பணை சேதம் அடைந்துள்ளதால், கால்வாயில் மழைநீர் சேமிப்பதிலும், நிலத்தடி நீர் பாதுகாப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே தடுப்பணையை சீரமைக்க திருவாலங்காடு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்