நாகூர் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
நாகூர் தர்கா
நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினமும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கடைத்தெருவில் உள்ள கடைகள் முன்பும், அருகில் உள்ள வீடுகள் முன்பும் நிறுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் சிக்கி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் சிரமப்படுகின்றனர். எனவே நாகூர் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் காஜி ஹுசைன் சாஹிப் கூறியதாவது:-
நாகூர் தர்காவிற்கு தினமும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இடவசதி செய்து தர வேண்டும்
அதேபோல் தர்கா குளங்களை சுற்றி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. தர்கா குளங்களை சுற்றியுள்ள சாலைகள் கரடு முரடாகவே காணப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் இடவசதி செய்து தர வேண்டும். மேலும் தர்கா குளத்தை சுற்றியுள்ள 4 தெருக்களிலும் சாலைகள் அமைத்து தர வேண்டும் என்றார்.
நாகூரை சேர்ந்த பாலாஜி கூறியதாவது: நான் தர்கா அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். போதிய இடவசதி இல்லாததால் கடைத்தெரு, செய்யது பள்ளி தெரு, அலங்கார வாசல், மனோகரா வடபுறம் தெரு ஆகிய பகுதிகளில் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் நான் தினமும் அலுவலகத்திற்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகி்றேன். எனவே நாகூர் பகுதியில் வாகனம் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும் என்றார்.