பச்சைமலைத்தொடரில் லாடபுரம்-சின்னமுட்லு நீர்த்தேக்கங்கள் கட்டப்படுமா?

பச்சைமலைத்தொடரில் லாடபுரம்-சின்னமுட்லு நீர்த்தேக்கங்கள் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-23 19:17 GMT

நீர்வரத்து

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை எண்ணற்ற இயற்கை வளங்களையும், வனக்காடுகள் மற்றும் மூலிகை பொக்கிஷங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 860 மி.மீ. மழை பெய்கிறது. இதில் சுமார் 500 மி.மீ. வடகிழக்கு பருவமழை காலத்திலும், சுமார் 360 மி.மீ. தென்மேற்கு பருவமழை காலத்திலும் பெய்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது.

மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது. பச்சைமலை தொடரில் லாடபுரம் அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் மயிலூற்று அருவி, ஆனைக்கட்டி அருவி (செக்காத்தி பாறை) ஆகியவை உள்ளன. மயிலூற்று அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து தொடங்கி உள்ளது.

ஏரிகள் நிரம்பும்

மயிலூற்று அருவியின் மேற்கே பச்ைசமலையில் உள்ள ஆனைக்கட்டி அருவியில் இருந்து ஆனைக்கட்டி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லாடபுரம் பெரிய ஏரியை நிறைத்து, உபரிநீர் குரும்பலூர் சென்றடைந்து வருகிறது. மீதமுள்ள வெள்ளநீர் ஓடையின் வழியாக கோனேரி ஆற்றின் வழியே சென்று குரும்பலூர் மேட்டாங்காடு தடுப்பணை வழியாக வெள்ளாற்றில் கலக்கிறது.

லாடபுரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் துறைமங்கலம் பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும். இந்நிலையில் லாடபுரம் மற்றும் சின்னமுட்லு நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டால் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது. எனவே அந்த நீர்த்தேக்கங்களை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நீர்த்தேக்கம்

ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் லாடபுரம் சந்திரசேகர்:- பச்சைமலையின் இரு தொடர்களை இணைத்து, ஆனைக்கட்டி அருவி ஆற்று ஓடைக்கு குறுக்கே பெரிய நீர்த்தேக்கம் கட்டினால் மழை, வெள்ள காலத்தில் பல மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைத்து அதனை பாசன வசதிக்காக பயன்படுத்த முடியும். பெரம்பலூர் பகுதியில் வறட்சி பாதிக்காத வகையில் பாசன நீர்த்தேவையையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனைக்கட்டி அருவியின் நீர் ஓடையின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டுவதற்காக மத்திய அரசு ஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

48 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை

அரும்பாவூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் குறிஞ்சிசிவா:- வேப்பந்தட்டை தாலுகாவில் கோரையாறு அருவி, மலையாளப்பட்டி சின்னமுட்லு அருவி, பூலாம்பாடி அருகே உள்ள வெண்புறா அருவி மற்றும் நீரோடைகள் அமைந்துள்ளன. கல்லாறு, வெள்ளாறு, சின்னாறு, லாடபுரம் அருகே உற்பத்தியாகும் கோனேரி ஆறு, சுவேதநதி, மருதையாறு போன்ற காட்டாறுகள் வெள்ளாறு, மருதையாறு ஆகியவற்றில் இணைந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. வடகிழக்கு பருவமழையையொட்டி அக்டோபர்-டிசம்பர் வரையிலான மாதங்களில் பச்சைமலையில் மிகுதியாக பெய்யும் மழைநீர் அரும்பாவூர் பகுதியில் முக்கிய ஏரிகளை நிரப்பி கல்லாற்றின் வழியாக சென்று கடலூர் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடலில் வீணாக கலக்கிறது. இதன் குறுக்கே அத்தியூரில் தடுப்பணை, வி.களத்தூர் அருகே ஒரு தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப்பட்டி அருகே சின்னமுட்லு அமைந்துள்ளது. பச்சைமலை உச்சியில் எட்டெருமை பாலி அருவியில் இருந்து உற்பத்தியாகி வரும் ஆற்றின் குறுக்கே சின்னமுட்டுலு பகுதியில் நீர்த்தேக்கம் கட்டும் திட்டம் 1952-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. 1973-ம் ஆண்டில் மீண்டும் அறிவிக்கப்பட்டு கடந்த 48 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. அதனை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

சின்னமுட்லு நீர்த்தேக்கம்

தொண்டமாந்துறையை சேர்ந்த சுயதொழில் ஆர்வலர் செந்தாமரை:- கடந்த 2015-ம் ஆண்டில் அன்னமங்கலம் ஊராட்சி விஸ்வகுடி அருகே பச்சைமலை-செம்மலை இடையே 2 ஆயிரத்து 500 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளை உள்ளடக்கியவாறு, 5.61 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் கொண்ட 34 அடி உயரம் கொண்ட நீர்த்தேக்க திட்டம் ரூ.35 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு 2016-ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டே விசுவக்குடி நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தது. விசுவக்குடி நீர்த்தேக்கத்தின் மூலம் 41 மில்லியன் கன அடி நீரில் தொண்டமாந்துறை, அன்னமங்கலம், விசுவக்குடி, பூம்புகார், பூஞ்சோலை, முகமதுபட்டினம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 30.67 மில்லியன் கனஅடி நீரை பாசனத்திற்கும், கிராம மக்கள் 10 மில்லியன் கன அடி நீரை குடிநீர் தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்ட ஆய்வு பணிக்காக ரூ.10 லட்சத்தை கடந்த ஆட்சியின்போது தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அந்த ஆய்வு பணியை தொடர்ந்து எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆகவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதம் வருகை தர உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக தொடங்கி வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்