மதுரையின் 2-வது முனையமாக கூடல்நகர் ஆகுமா?-கோட்ட மேலாளர் அனந்த் பதில்

பாம்பன் பாலத்தில் வருகிற ஜூன் மாதம் வரை ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மதுரையின் 2-வது முனையமாக கூடல்நகர் மாறுமா? என்பது பற்றியும் கோட்ட மேலாளர் அனந்த் பதில் அளித்தார்.

Update: 2023-02-03 19:31 GMT

பாம்பன் பாலத்தில் வருகிற ஜூன் மாதம் வரை ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மதுரையின் 2-வது முனையமாக கூடல்நகர் மாறுமா? என்பது பற்றியும் கோட்ட மேலாளர் அனந்த் பதில் அளித்தார்.

ரெயில்வே பட்ஜெட்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான ஒதுக்கீடு குறித்து, ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள ரெயில்வே மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட மேலாளர் அலுவலகங்களில் உள்ள நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அதன்படி, தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில், ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டம் மேலும் பல்வேறு ரெயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது, தென்னக ரெயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களுக்கு தலா 15 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

ஒரு ரெயில் நிலையம், ஒரு பொருள் திட்டத்தின் கீழ், அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தமிழக, கேரள ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, என்றார். பின்னர், மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றி கோட்ட மேலாளர் அனந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை கோட்டத்தில் மதுரை, ராமேசுவரம் ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து அம்பை, காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, ராமநாதபுரம், ராஜபாளையம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் புனலூர் ஆகிய ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. மதுரை-போடி, விருதுநகர்-தென்காசி, செங்கோட்டை-நெல்லை, செங்கோட்டை-பகவதிபுரம், புனலூர்-எடமன் இடையே மின்மயமாக்கல் பணி நடந்து வருகிறது.

மண்டபத்துடன் ரெயில்கள் நிறுத்தம்

இந்த பணிகள் அடுத்த மாதம் மற்றும் வருகிற ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீளவிட்டான்-மேல்மருதூர் இடையேயான 17.75 கி.மீ. தூரத்துக்கு மின்மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நெல்லை-திருச்செந்தூர், பழனி-பொள்ளாச்சி, திருமங்கலம்-துலுக்கப்பட்டி, துலுக்கப்பட்டி-கோவில்பட்டி, கோவில்பட்டி-கடம்பூர், கங்கைகொண்டான்-நெல்லை இடையே புதிதாக போடப்பட்ட 2-வது அகலப்பாதையிலும், திருச்சி-புதுக்கோட்டை, தட்டப்பாறை-மீளவிட்டான் இடையேயும் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான வசதிகளை பொறுத்தமட்டில், பல்வேறு பணிகளில் மேட்டூர், கீழப்புலியூர் ரெயில் நிலையங்களில் கழிப்பறைகளும், திருமங்கலம், கள்ளிக்குடி, துலுக்கப்பட்டி, சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாம்புகோவில்சந்தை, மேலக்கொன்னக்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், கீரனூர், சிவகங்கை, மண்டபம், கல்லல், தேவகோட்டை ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரங்களின் உயரத்தை அதிகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. பாம்பன் பால பராமரிப்பு பணிக்காக வருகிற ஜூன் மாதம் வரை ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். திருமங்கலம்-மதுரை இரட்டை அகலப்பாதை இணைப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும்.

கூடல்நகர் முனையம் ஆகுமா?

மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண கூடல்நகர் ரெயில் நிலையத்தை 2-வது முனையமாக்குவது பற்றி கேட்கிறீர்கள். அந்த திட்டத்தால் பயணிகளுக்கு நிறைய சிக்கல்கள் இருப்பதால், தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, முதுநிலை இயக்க மேலாளர் டாக்டர் ராஜேஷ் சந்திரன், முதுநிலை ஒருங்கிணைப்பு என்ஜினீயர் நாராயணன், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சுபாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத், வரவேற்பு ஆய்வாளர் வரதராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்