நரிக்குறவர் குழந்தைகள் படிப்பை தொடர ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படுமா?
கீரமங்கலம் அறிவொளி நகர் மற்றும் எல்.என்.புரம் சுக்கிரன்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் குழந்தைகள் படிப்பை தொடர ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆதார் அட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் வடக்கு நரிக்குறவர் காலனி உள்ளது. 1990-91 காலக்கட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த ஷீலாராணி சுங்கத் அப்பகுதி பொதுமக்களுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக அறிவொளி கல்வியை தொடங்கி வைத்து அறிவொளி நகர் என்று பெயர் வைத்தார்.
அதன் பிறகு தொடர்ந்து கண்காணித்து வந்தார். இங்கு தற்போது 150 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். ஆனால் பலருக்கும் ஆதார் அட்டை இல்லாததால் படிப்பு பாதிக்கப்படுவதுடன் மருத்துவக் காப்பீடு, ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
திருப்பி அனுப்புகிறார்கள்
இது குறித்து அறிவொளி நகர் ஜெயேந்திரன் கூறுகையில், எங்கள் காலனியில் 150 குடும்பங்கள் வசித்தாலும் 70, 80 பேருக்கு ஆதார் அட்டை இல்லை. எங்கேயாவது ஏதாவது சலுகை கேட்டு போனால் ஆதார் கேட்கிறார்கள். ஆதார் அட்டை பதிவு செய்ய போனால் ரேஷன் அட்டை இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் எங்கள் அறிவொளி நகர் மக்கள் பலரும் அரசு சலுகை பெற முடியாமல் முதியோர் உதவிதொகை கூட கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்றார்.
சிறப்பு முகாம்
உமா:- எங்கள் அறிவொளி நகர் மக்கள் திருவிழாக்களில் பாசி, மணி, பலூன் விற்று பிழைக்கிறோம். எங்கள் குழந்தைகள் படிக்க வைக்க ஆதார் கேட்கிறார்கள். பல குழந்தைகளுக்கு இல்லை அதனால் படிப்பு பாதிக்குமோ என்ற நிலையில் இருக்கிறோம். எங்கள் மக்களும் இனியும் வயல் வரப்பில் கிட்டி போட்டு எலி புடிக்கிறதை மாத்திட்டு பள்ளியில் படிச்சு பெரிய ஆளா வரணும். அதுக்கு ஆதார் வேணும். அதுக்காக பல இடங்களுக்கும் அலைந்தும் கிடைக்கலை. அதனால் சிறப்பு முகாம் போட்டு ஆதார் எடுக்கணும் என்றார்.
அரசு சலுகைகள் கிடைக்கும்
சமூக ஆர்வலர் சிகாலெனின்:- அறிவொளி நகர் போல எல்.என்.புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டு, மேற்பனைக்காடு ஊராட்சி புதுக்குடியிருப்பு போன்ற பகுதியில் வசிக்கும் கல்வியில் பின்தங்கிய தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆதார் அட்டை இல்லாமல் படிப்பு பாழாகிறது.
அதேபோல ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு, மாற்றுத்திறனாளி அட்டை, முதியோர் உதவித்தொகை எதுவும் கிடைக்கவில்லை. இவர்களுக்காக கீரமங்கலத்தில் ஒரு நாள் ஆதார் சிறப்பு முகாம் நடத்தினால் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்கும். அதன் பிறகு அரசு சலுகைகளையும் பெற முடியும். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்திருக்கிறேன் என்றார்.