நெல்லை: தொடர் மழையால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
நெல்லையில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்த மழையானது 3-வது நாளாக நேற்றும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு சுமார் 21 ஆயிரத்திற்கும் மேல் கன அடி நீர்வரத்து இருந்தது. இருந்த போதிலும் அணையில் போதியளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் நீர் வெளியேற்றம் குறைவாக காணப்பட்டு வருகிறது.
மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த அருவியே தெரியாத அளவுக்கு தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. பாபநாசம் அனவன்குடியிருப்பு பகுதியில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழாவிற்காக சுமார் 80 முதல் 100 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிடுவார்கள். இந்த ஆண்டு 80 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தனர். கரும்பு பயிரிட்டு 9 மாதங்களாகி பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அனவன் குடியிருப்பு அருகே உள்ள சிங்கபெருமாள் குளம் உடைப்பு மற்றும் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் உடைப்பினால் மழைநீர் கரும்பு பயிரிட்ட விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் சுமார் 20 ஏக்கரில் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. அதேபோல, சேரன்மகாதேவி தாலுகாவிற்கு உட்பட்ட உதயமார்த்தாண்டபுரம், சக்திகுளம், கூலியூர், சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.