நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நடை பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரிச்சந்திரபுரம் கடைவீதிக்கும், உச்சுவாடி கிராமத்துக்கும் இடையே இணைப்பு பாலமாக, வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் கட்டப்பட்டது. இந்த நடை பாலத்தை வடபாதிமங்கலம், உச்சுவாடி, வடவேற்குடி, சேந்தங்குடி, ராமநாதபுரம், குலமாணிக்கம், மன்னஞ்சி, பெரியகொத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கடைவீதி, பஸ் நிறுத்தம் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர்.
மண் சரிவு
இந்த பாலம், ஆற்றின் கரையோரம் உள்ள பாலம் என்பதால், பாலத்தின் முகப்பில் 2 பக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. பாலத்தின் முகப்பில் மக்கள் கடந்து சென்று வருவதற்கு பாதுகாப்பாக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர்கள் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. எனவே பாலத்தின் முகப்பில் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது.இதனால் இரவு மட்டுமின்றி, பகலிலும் பள்ளத்தில் விழுந்து சிலர் காயம் அடைந்தனர். பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவருக்கு பதிலாக, மூங்கில் மரங்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் மூங்கில் மரங்கள் மடிந்து போய் அவைகளும் சாய்ந்து விழுந்து விடுகின்றன.
தடுப்புச்சுவர்
இதனால், பாலத்தின் முகப்பில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்படுவதும், அதில் விழுந்து சிலர் காயம் அடைவதுமாக இருந்து வருகிறது. எனவே கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி நடைபாலம் முகப்பில் 2 பக்கமும் தடுப்புச்சுவர் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.