வீரமுரட்டி வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா?
அறுவடை செய்து நெல்மூட்டைகளை தலையில் சுமர்ந்து செல்லும் அவல நிலை உள்ளதால் வீரமுரட்டி வாயக்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
அறுவடை செய்து நெல்மூட்டைகளை தலையில் சுமர்ந்து செல்லும் அவல நிலை உள்ளதால் வீரமுரட்டி வாயக்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வீரமுரட்டி வாய்க்கால்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மேலசோத்திரியம் பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.இந்த பகுதியில் வீரமுரட்டி வாய்க்கால் உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல திருச்செங்காட்டங்குடி விவசாயிகள் வீரமுட்டி வாய்க்காலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் விளைநிலங்களுக்கு விதைகள், உரம், மருந்து, அறுவடை செய்த நெல் மூட்டைகள், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களையும் விவசாய பணிகளுக்கு டிராக்டர் மற்றும் அறுவடை எந்திரங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
நெல் மூட்டைகள் தலையில் சுமந்து வருகின்றனர்
விவசாயத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வீரமுட்டி வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாததால் தங்களது தலையில் சுமந்தபடியே ஒரு கரையில் இருந்து மறுபக்க கரைக்கு எடுத்து செல்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரம், விதைகள், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை விவசாயிகள் தங்கள் தலையில் சுமந்து கொண்டு வாய்க்காலில் இறங்கி நடந்து செல்கின்றனர். வாய்க்காலில் தண்ணீர் இருக்கும் போது கழுத்தளவு தண்ணீரில் உயிரை பணயம் வைத்து எடுத்து செல்கின்றனர். மழை வெள்ள காலங்களில் இப்பகுதிக்கு செல்ல திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரம் வழியாக 3 கிலோமீட்டர் தூரம் சுற்றியும், செட்டி தோப்பு வழியாக 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாலம் கட்ட வேண்டும்
வாய்க்காலின் குறுக்கே நடந்து செல்லும் போது தண்ணீரில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.மேலும் விவசாய பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாமலும் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலசோத்திரியம் பகுதிக்கு செல்ல வீரமுட்டி வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீரமுட்டி வாயக்காலின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.