சுருளியாறு மின்நிலையம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

சுருளியாறு மின்நிலையம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-21 21:00 GMT

கூடலூர் அருகே வண்ணாத்திபாறை, மங்கலதேவி கண்ணகி கோவில் பீட், மாவடி, வட்டத்தொட்டி, பளியன்குடி ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அரியவகை மரங்களும், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் உள்ளன.

இந்தநிலையில் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் வறண்டு போனது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் தேடி குட்டிகளுடன் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுருளி அருவி பகுதிக்கு இடம் பெயர்ந்தன. 2 நாட்களாக அங்கேயே யானைகள் முகாமிட்டன. இதனால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் திடீரென்று தடை விதித்தனர்.

இதற்கிடையே அங்கிருந்த காட்டு யானைகள் நேற்று உணவு தேடி சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதனால் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மின்நிலைய பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்