வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

கரூர் அருகே வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-06 19:22 GMT

40 ஏக்கர் பாசனம்

கரூர் அருகே உள்ள எல். என்.எஸ்.கிராமம் பகுதிக்கு உட்பட்ட அரிக்காரம்பாளையத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அங்கு அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் ராஜா வாய்க்காலின் கிளை வாய்க்கால் மூலம் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரத்தை பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மட்டும் கிளை வாய்க்கால் பாசனத்தை கொண்டு சுமார் 40 ஏக்கர் பாசனம் பெற்று வரும் நிலையில் இப்பகுதியில் நெல், சோளம், உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

பன்றிகள் நாசம்

இந்நிலையில் அரிக்காரம் பாளையம் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் முட்செடிகள் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்து அங்கு உள்ள பயிர்களை நாசம் செய்வதோடு கிளை வாய்க்கால்களையும் பறித்து நீர் செல்ல முடியாதபடி தடுத்து வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள ஊருக்குள்ளும் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த பகுதியை சுற்றி வரும் சுமார் 100-க்கும் மேற்பட்ட காட்டுபபன்றிகள் வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது தற்போது ஓரளவு மழை பெய்து உள்ள நிலையில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது நெல் நாற்றுகள் பயிர் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் நகராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் பிரதான தொழிலான விவசாயத்தை காக்க உடனடியாக அப்பகுதியில் உள்ள முட்செடிகளை அகற்றி பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்