விபத்தில் பலியான காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் தூக்கி சென்றதால் வனத்துறையினர் விசாரணை

விபத்தில் பலியான காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் தூக்கி சென்றதால் பரபரப்பு - வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-01-02 21:27 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி, மேலக்கோட்டை, ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள், மயில்கள், காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் காட்டுப்பன்றி, மான்கள் அடிக்கடி இரை தேடி சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திருமங்கலம்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயது மதிக்கத்தக்க காட்டுப்பன்றி ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காட்டுப்பன்றி மாயமானது தெரிய வந்தது. இது குறித்து அவர் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறையினர் வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றி மாயமான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகள் விபத்தில் இறந்தால் அதை எடுத்துச் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டும் விபத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் தூக்கி சென்ற சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்