நடுரோட்டில் மனைவி வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்... தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடியில் மொபட்டில் சென்றபோது நடுரோட்டில் வழிமறித்து பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-05-05 01:22 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். (வயது 35). இவருடைய மனைவி சந்தன மாரியம்மாள் (32). இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அங்கு சம்பாதித்த பணத்தை, சந்தன மாரியம்மாளுக்கு அனுப்பியுள்ளார். அந்த பணம் மூலம் தூத்துக்குடி கிருபை நகரில் சந்தன மாரியம்மாள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டையும் தனது பெயரிலேயே வாங்கியுள்ளார்.

பின்னர் சிங்கப்பூரில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலமுருகன் திரும்பி வந்து கிருபை நகரில் மனைவியுடன் இருந்தார். அப்போது பாலமுருகன் செலவுக்கு பணம் கேட்கும்போது சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்தன மாரியம்மாள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதனால் பாலமுருகன் கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே சந்தன மாரியம்மாள் தனது தாய் மாமாவான காளிமுத்து என்பவரிடம் இருந்து 40 பவுன் நகைகளை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் காளிமுத்து தான் கொடுத்த நகைகளை திருப்பிக் கேட்டபோது சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன், காளிமுத்து ஆகிய இருவரும் சந்தன மாரியம்மாள் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே மொபட்டில் சென்று விட்டு கணேஷ்நகர் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன், காளிமுத்து ஆகிய இருவரும் நடுரோட்டில் வழிமறித்து சந்தன மாரியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சந்தன மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் 2 பேரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், சந்தன மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்