கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-30 05:46 GMT

சென்னை,

சென்னையை சேர்ந்த சசிகலா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'எனது கணவர் சிவக்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ளார். எனது கணவர் சிவக்குமாருக்கு சொந்தமான அசையா சொத்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் உள்ளது. எனது கணவரின் சொத்துகளை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். அவரது வங்கி கணக்குகளை கையாளவும், வால்டாக்ஸ் சாலையில் உள்ள சொத்தை விற்கவும் அனுமதிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'சட்டத்தில் இடமில்லாததால் பாதுகாவலராக நியமிக்கக்கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. உரிமையியல் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்' என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் விசாரித்தனர். அப்போது சசிகலா மற்றும் அவரது இரு குழந்தைகள் கோர்ட்டில் ஆஜராகி, 'சொத்துகளை விற்க அனுமதி வழங்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்' என கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர், கோமா நிலையில் உள்ள தனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ள நிலையில், வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனி செவிலியர்களை நியமிக்க வேண்டியது உள்ளது.

கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானதல்ல. அதற்கு நிதி தேவைப்படும் நிலையில், உரிமையியல் கோர்ட்டை நாடி நிவாரணம் பெறக்கூறுவது முறையற்றது. எனவே, தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்தை மனைவி விற்பது தொடர்பாக சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டால் சட்ட பாதுகாவலர் என்ற முறையில் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கலாம் என கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

இந்த உத்தரவுப்படி, மனுதாரர் தனது கணவரின் சொத்துகளை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. சசிகலா, அவரது கணவர் சிவக்குமாரின் பாதுகாவலராக நியமிக்கப்படுகிறார்.

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கணவரின் சொத்தை விற்க சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதில், 50 லட்சம் ரூபாயை சிவகுமாரின் பெயரில் நிரந்தர வைப்பீடாக முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து வரும் வட்டியை 3 மாதத்துக்கு ஒருமுறை எடுத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்