பேராவூரணி பகுதியில் பரவலாக மழை
பேராவூரணி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
பேராவூரணி:
பேராவூரணி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ெவயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இதனால் மின்விசிறி இன்றி தூங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வழக்கம் போல் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு 7 மணி வரை 1 மணி நேரம் நீடித்தது. வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்கும், தென்னை சாகுபடிக்கும் இந்த மழை மிகவும் பயன் உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 6.30 மணி வரை நீடித்தது. இதை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.