பெரம்பலூரில் பரவலாக பெய்த கனமழை

பெரம்பலூரில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-10-16 18:06 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வந்தது. இதனால் மழை பெய்யுமா? என்று பொதுமக்கள் ஏக்கத்துடன் இருந்தனர். இந்தநிலையில் பெரம்பலூரில் நேற்று மதியம் 3.30 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்ததால் இரவு போல் காட்சியளித்தது. இந்த நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். பின்னர் 4 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்