மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

நீலகிரி மாவட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2022-06-10 23:39 GMT

சென்னை,

வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் மதுபான பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் அதை மிதிக்கும் வன விலங்குகள் காயமடைந்து பலியாகுகின்றன.

இதை தடுக்க திட்டம் வகுக்காவிட்டால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே எச்சரிக்கை செய்தது.

இதையடுத்து, மலைப்பிரதேச டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும். காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது, அந்த கூடுதலான தொகை திருப்பி கொடுக்கப்படும் என்ற திட்டத்தை கொண்டு வருவதாக அரசு விளக்கம் அளித்தது.

திடீர் சோதனை

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ''நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை ஏன் தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும் நீலகிரியில் இந்த திட்டம் முறையாக செயல்பாட்டில் உள்ளதா? என்பதை மாவட்ட கலெக்டரும், டாஸ்மாக் மேலாளரும் திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

அப்போது அரசு தரப்பில், ''நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும்'' என்று கூறப்பட்டது.

அன்னிய மரங்கள்

இதைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்றுவது குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்