காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? ஜி.கே.வாசன் கேள்வி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-10-10 19:08 GMT

ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தாத தமிழக அரசை கண்டித்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், அரியலூர் மாவட்ட தலைவர் குமார், மாநில விவசாயி அணி தலைவர் ரெங்கராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் சுதாகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக, தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிந்ததும், ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்

இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களையும், 64 தமிழர்களையும் மீட்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையை தமிழக அரசு அறிவுப்பூர்வமாக அணுகவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? என்பது மிகப்பெரிய கேள்வியாகும். இதை அரசியல் கண்ணோட்டத்துடனும், தேர்தல் கண்ணோட்டத்துடனும், கூட்டணி கண்ணோட்டத்துடனும், வாக்கு வங்கி அரசியலுக்காக பார்க்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பது த.மா.கா.வின் எண்ணமாகும். தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே காவிரி விவகாரத்திற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும் என கூறியது. ஆனால் அதற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. டாஸ்மாக்கில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் என்றால் டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களை அரசு ஊக்கப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆறுதல்

எனவே பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சரியாக நிவாரணம் கொடுக்க வேண்டும். மறுபுறம் தமிழகத்தில் பட்டாசு விபத்துக்கள் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். வெற்றியூரில் நடந்த வெடி விபத்து சம்பவம் வேதனையான சம்பவமாகும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வெடி விபத்தில் காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் நேற்று மாலை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து டாக்டர்களிடம், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்