லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? - விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.

Update: 2023-10-12 08:58 GMT

சென்னை,

நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக, விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.80 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது. பணம் இருந்தும் வேண்டும் என்றே தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விஷால் தராமல் இருப்பதாக லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதியாவது செலுத்த உத்தரவிட வேண்டும் என்று லைகா தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

விஷால் தரப்பு வழக்கறிஞர், லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய நீதிபதி ஏன் இன்னும் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 1-ஆம் தேதிக்கு கோர்ட்டு தள்ளி வைத்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்