விழுப்புரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை யார் அவர்? போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-01 18:45 GMT

விழுப்புரம் பானாம்பட்டு சாலை சந்திப்பில் இருந்து அகரமேடு செல்லும் சாலையில் ஆண்டிப்பாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வெட்டிக்கொலை

பிணமாக கிடந்த அந்த வாலிபர் நீலநிற கட்டம் போட்ட லுங்கியும், நீலநிற சட்டையும் அணிந்திருந்தார். அவரது பின்புற கழுத்துப்பகுதி மற்றும் தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ வெட்டிக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தொடர்ந்து, தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள கும்பகோணம்- பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெளியூரை சேர்ந்தவரா?

இதுகுறித்து அக்கம், பக்கத்தினரிடமும், சுற்றுவட்டார கிராம மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோதிலும் கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதனால் அவர், வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அங்கு அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு உடலை ஏதேனும் வாகனத்தில் எடுத்துவந்து ஆண்டிப்பாளையம் பகுதியில் வீசிவிட்டு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மார்பு பகுதியில் தியாகு என்றும், இடது கை கட்டை விரலில் திவ்யா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இறந்தவர் பெயர் தியாகுவாக இருக்கலாம் என்றும் அப்பெண், அவரது மனைவி அல்லது காதலியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

போலீசார் தீவிர விசாரணை

இதனிடையே கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரிக்க இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், வாலிபரின் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு கொலையாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்