வெங்கடாஜலபதி கோவில் புதுப்பிக்கப்படுவது எப்போது?

வெங்கடாஜலபதி கோவில் புதுப்பிக்கப்படுவது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-29 19:29 GMT

பழமை வாய்ந்த கோவில்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தின் மையப்பகுதியில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் தற்போது காலை, மாலை ஆகிய 2 வேளைகளில் பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

கருங்கற்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலில் தற்போது பல்வேறு இடங்களில் சேதமடைந்து கற்கள் சரிந்து வருகிறது. மேலும் கோவில் பராமரிப்பின்றி வளாகம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து மோசமாக காட்சியளிக்கிறது. மேலும் கோவில் கட்டிடத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த கோவில் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக பக்தர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது

இந்த நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, உப்பிலியபுரத்தை சேர்ந்த கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் பாபு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்களுடன் கோவிலுக்கு நேற்று சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பெருமாள் கோவில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோவில் ஆகும்.

400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவிலான இந்த கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தீர்த்த கிணறு, சுற்றுச்சுவர், மடப்பள்ளி என்ற அமைப்போடு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் விமானம் ஏகதன அமைப்புடையது. விமானம் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டுள்ளது. அதிட்டான் பகுதி தொடங்கி பிரஸ்தரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

தசாவதார சிற்பங்கள்

கோவிலின் கருவறையின் வெளியே பின்புற பகுதியில் தசாவதார சிற்பங்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த கோவிலில் சேதமடைந்த நிலையில் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இத்தகைய தொன்மை சிறப்பு வாய்ந்த கோவில் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பது கலை ஆர்வலர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் வருத்தமடைய செய்துள்ளது. எனவே இந்த பழமை வாய்ந்த கோவிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொன்மை மாறாமல் புனரமைக்க வேண்டும், என்றார்.

திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்

கோவில் அர்ச்சகர் அழகிய மணவாளன் கூறுகையில், நான் இந்த கோவிலில் 1984-ம் ஆண்டு முதல் பூஜைகள் செய்து வருகிறேன். கோவிலில் 150-க்கும் மேற்பட்ட கலைநயமிக்க சிற்பங்கள் உள்ளன. முன்பெல்லாம் இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழாக்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பெயரளவுக்கு தான் விழாக்கள் நடத்தப்படுகிறது. பழமையான கோவிலில் தற்போது மகா மண்டபம் சுவர் பகுதி இடிந்து விழுந்துள்ளது. தீர்த்த கிணறு பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் கோவிலின் பெரும் பகுதியில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளது வருத்தமாக உள்ளது. எனவே கோவிலை தொன்மை மாறாமல் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்

சிவன், பெருமாள் கோவில்களின் திருப்பணிகள் குழு சிவக்குமார் கூறுகையில், நக்கசேலம் கிராமத்தில் துவாரகபுரீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், பிரசன்ன வெங்கடாஜலபதி என்ற பெருமாள் கோவிலும் உள்ளது. இந்த 2 கோவில்களையும் தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் 2 கோவில்களிலும் திருப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படவில்லை. தற்போது சிவன் கோவில் திருப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் பக்தர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் நன்கொடை உதவியுடன் திருப்பணிகள் குழு கமிட்டி மூலம் நடைபெற்று வருகிறது. ஆனால் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளாததால் கோவில் இடிந்து வருகிறது. எனவே இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டுவதற்கு பக்தர்களும், பொதுமக்களும், உபயதாரர்களும் ஆர்வத்துடன் தயாராக இருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் சிவன் கோவிலை போன்று பெருமாள் கோவிலையும் தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொள்ளலாம், என்றார்.

பக்தர்கள் கோரிக்கை

இது குறித்து கோவில் அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி அளித்தவுடன் கோவில் திருப்பணிகள் கமிட்டி குழுவினரிடம் கலந்து ஆலோசித்து கோவில் திருப்பணிகள் தொடங்கப்படலாம், என்று தெரிவித்தனர்.

நக்கசேலம் கிராமத்தில் உள்ள இந்த பழமையான பெருமாள் கோவிலை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பக்தர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்