தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பது எப்போது?

தென்காசியில் ரூ.119 கோடியில் 6 மாடிகளுடன் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-08-21 18:45 GMT

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 22-11-2019 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதற்காக தென்காசி அருகே ஆயிரப்பேரியில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பின்னர் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.119 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடபெற்றது.

6 மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு தற்போது பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இங்கு பெயிண்டிங் உள்ளிட்ட சிறிய பணிகளே நடைபெற வேண்டி உள்ளது. தென்காசியின் அடையாளமாக கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த சில நாட்களாக கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய கட்டிடத்துக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டு உள்ளது.

தற்போது தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ெரயில் நகர் பகுதியில் உள்ள பொது வினியோக துறைக்கு சொந்தமான கிட்டங்கியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இது சிறிய இடம் என்பதால் இன்னும் சில துறைகள் நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசிக்கு மாற்றப்படாமலே உள்ளன. இதனால் பொதுமக்கள், அலுவலர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெற்று கட்டிட பணிகளை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் தென்காசி புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகள் நிறைவு பெறாமலும், திறப்பு விழா காணாமலும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பணிகள் எப்போது முடிந்து புதிய கட்டிடம் திறக்கப்படும் என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.

தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் சலீம்:- தென்காசி மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாகி விட்டது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி 95 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்று உள்ளது. இந்த பணிகளை தொடங்கும்போதே சுற்றுச்சூழல் சான்றிதழை பெற்றிருக்கலாம். சுற்றுச்சூழல் சான்றிதழும் மாநில அரசிடம்தான் பெற வேண்டும். புதிய கலெக்டர் அலுவலக தாமதத்தால் அனைத்து தரப்பினரும் பல்வேறு பணிகளுக்கு நெல்லைக்கு செல்ல வேண்டி இருப்பதால் அழைக்கழிக்கப்படுகின்றனர். எனவே புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றி திறக்க வேண்டும்.

தென்காசி அருகே மேலகரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சங்கர நாராயணன்:- தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டாலும் இன்னும் பல்வேறு துறைகளுக்கு நெல்லையைச் சார்ந்தே உள்ளோம். இதற்காக தென்காசியில் இருந்து நெல்லைக்கு அடிக்கடி சென்று வருகிறோம். தற்ேபாது தென்காசி- நெல்லை இடையே சாலை விரிவாக பணிகள் நடைபெற்று வருவதால், ஒவ்வொரு முறையும் நெல்லைக்கு பயணிக்க சிரமப்படுகின்றோம். தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டும் பல மாதங்களாக பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூறும்போது, 'மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த சான்றிதழ் கிடைத்ததும் புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்' என்றார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிட பணிகளை நிறைவு செய்து, திறந்து வைப்பதற்கு ஏதுவாக, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மூலம் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. சுற்றுச்சூழல் சான்றிதழ் சில நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சில மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று புதிய கட்டிட திறப்பு விழா விரைவில் நடைபெறும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்