20 கிராம மக்களின் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?-பூமி பூஜையுடன் நிற்கும் மேம்பால திட்டம்

20 கிராம மக்களின் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?-பூமி பூஜையுடன் நிற்கும் மேம்பால திட்டம்

Update: 2022-10-01 20:37 GMT

திருமங்கலம்

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் ஓர் முக்கிய நகரம். தென்மாவட்டங்களின் நுழைவு வாயில்.

20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் விடத்தக்குளம், விருச்சங்குளம், எட்டு நாழிபுதூர், மைக்குடி, உலகாணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் விளையும் பருத்தி, காய்கறி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருட்கள் காலை 7 மணிக்குள் திருமங்கலம் மார்க்கெட் பகுதிக்கு வர வேண்டும்.

ஆனால், அந்த பகுதிக்கான சாலையின் நடுவே ரெயில்வே கேட் உள்ளது. சில நேரங்களில், அடுத்தடுத்து 2 முறை ெரயில் கடந்து செல்லும். அப்போது கேட் அடைத்து திறக்க குறைந்தது அரைமணி நேரம் ஆகும். இதனால் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. காய்கறிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை.

75 முறை ரெயில்கள் கடக்கின்றன

திருமங்கலத்தின் வடபகுதியான காமராஜர்புரம் வடபகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தினந்தோறும் திருமங்கலம் நகர் பகுதிக்கு வர வேண்டும் என்றால் ெரயில் தண்டவாளத்தை கடந்துதான் வரவேண்டும்.

மேலும் அந்த ெரயில்வே கேட், திருமங்கலம் ெரயில் நிலையம் பகுதியில் உள்ள முதல் கேட்டாகும். தினந்தோறும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ெரயில்கள், சரக்கு ெரயில்கள் என பகல், இரவு நேரத்தில் நாளொன்றுக்கு 75 முறை ரெயில்கள் கடக்கின்றன.. ஆதலால் ெரயில்வே கேட்டை கடக்க ஒவ்வொரு முறையும் நீண்டநேரம் காத்துக் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மண் பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இத்திட்டத்தை விரைவுபடுத்தி ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வக்கீல் இளையராஜா:-

இந்த ெரயில்வே கேட் உள்ள காரணத்தினால் சோழவந்தான் ரோடு உள்ளிட்ட விரிவாக்க பகுதிகள் குறைந்த வளர்ச்சியே அடைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ெரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டி இருக்கும் பகுதியில் மக்கள் குடிவருவதற்கோ அல்லது புதிதாக வீடு கட்டுவதற்கோ தயக்கம் காட்டுகின்றனர். விரைவில் ெரயில்வே மேம்பாலம் அமைப்பதன் மூலம் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

திருப்பதி:

திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி பெரும் பிரச்சினையாக உள்ளது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் கட்டணம் வசூல் செய்வதால், மதுரை செல்லும் உள்ளூர் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லாமல் மாற்று வழியாக இந்த சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் வாகனங்கள் ெரயில்வே கேட் முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வரை நிற்பதால் சில நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விரைவில் நிலங்களை கையகப்படுத்தி பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்