ஊட்டியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைவது எப்போது?
ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இங்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டி,
ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இங்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு. பசுமையான தேயிலை தோட்டங்கள். மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள். மலைப்பாதையில் ஊர்ந்து செல்லும் மலை ரெயில். பல்வேறு சுற்றுலா தலங்கள் என சிறப்புகளை கொண்டதாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஊட்டி, குன்னூா, கோத்தகிரி, கூடலூர், மசினகுடி, முதுமலை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.
சீசன் காலங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் வருகிறார்கள். குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் படையெடுப்பதால், ஊட்டி நகர் மட்டுமின்றி பிற சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்
ஊட்டியில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. ஏற்கனவே உள்ள அரசு, தனியார் வாகன நிறுத்துமிடங்கள் சுற்றுலா வாகனங்களால் நிரம்பி வழியும். இதனால் சுற்றுலா வருபவர்கள் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் சீசனில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதை கருத்தில் கொண்டு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் (மல்டிலெவல் பார்க்கிங்) பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. இதனால் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் ஊட்டி நகரம் திணறி வருகிறது. மேலும் ஊட்டி நகரில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் 4 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. அங்கு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் பூட்டியே கிடக்கிறது. எனவே, பார்க்கிங் பிரச்சினைக்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தால் தான் தீர்வு காண முடியும். இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
30 லட்சம் பேர் வருகை
ஊட்டியை சேர்ந்த லாரன்ஸ்:-
நீலகிரியில் சுற்றுலா பயணிகளை நம்பி சுற்றுலா வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவதால், ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஊட்டி நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. மேலும் சாலையோரங்கள் மற்றும் சில நேரங்களில் வீடுகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அப்போது நகருக்கு சென்று வர நீண்ட நேரம் ஆகிறது. இதனால் மார்க்கெட் பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, ஊட்டியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் விரைந்து அமைப்பதோடு, பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
திட்டங்களை வகுக்க வேண்டும்
பள்ளி ஆசிரியை சுபாஷினி:-
பொதுவாக ஒரு நகருக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது. ஆனால், சுற்றுலா தலமான ஊட்டியில் அந்த முறை பின்பற்றப்படுவது இல்லை. எனவே, இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இல்லையென்றால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்கள் கடும் சிரமப்படுவார்கள்.
வாகன போக்குவரத்து அதிகரிக்கும் நாட்களில், நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கிறது. ஊட்டியில் வாகனங்களை நிறுத்த போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் நகரில் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க, ஒரு வழியாக வரவும், மற்றொரு வழியாக ஊட்டியில் இருந்து திரும்பி செல்லவும் வழிவகை செய்யலாம்.
சுற்றி, சுற்றி வருகிறோம்
ஊட்டியை சேர்ந்த ஜனார்த்தனன்:-
ஆண்டுதோறும் ஊட்டிக்கு முக்கிய தலைவர்கள் வரும்போது, வாகன நிறுத்துமிட பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், தேர்தல் வாக்குறுதி போல் அதை மறந்து விடுகின்றனர். கடந்த 10 ஆண்டு காலமாக வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் ஊட்டி நகரம் பரிதவிக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏ.டி.சி. பகுதியில் கழிப்பறை, ஓய்வு அறை, புத்துணர்வு அளிக்கும் கடைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மதிப்பீட்டுடன் திட்ட அறிக்கையை வெளியிட்டால் மட்டும் போதாது. திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா பயணி கதிர்:-
சினிமாவில் ஊட்டியின் அழகை மட்டும் பார்க்க முடிகிறது. ஆனால், நேரில் வரும் போது தான் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவருகிறது. குறிப்பாக வாகன நிறுத்துமிட வசதி போதிய அளவு இல்லாததால், வாகனங்களை நிறுத்த முடியாமல் நகர் முழுவதும் மீண்டும், மீண்டும் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஏதாவது சாப்பிடலாம் என்று நினைத்தால் கூட, பார்க்கிங் இருக்கிற ஓட்டலை தேடி செல்கிறோம். அங்கு செலவு அதிகமாக ஆகும். சாதாரண ஓட்டலுக்கு செல்லலாம் என்று நினைத்தால், வாகனத்தை நிறுத்த இடமில்லாமல் தலை கிறுகிறுக்கிறது. இதனால் நகரை விட்டு வெளியே சென்று சாப்பிடலாம் என்று முடிவு செய்து விடுகிறோம். இதனால் எங்களுக்கு மட்டும் இழப்பு கிடையாது. சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் நடத்துபவர்களுக்கும் இழப்புதான். சுற்றுலா பயணிகள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கவும், வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்தவும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
(பாக்ஸ்)மேலும் 2 இடங்களில் வசதி ஏற்படுத்தப்படும்
அதிகாரி தகவல்
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் கூறியதாவது:-
ஊட்டியில் ரூ.20 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு 210 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் அடுக்கடுக்காக வரிசையாக நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. வாகன நிறுத்துமிடத்தில் சுற்றுலா பயணிகள், டிரைவர்கள் என ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிடங்கள் கட்டப்படுகிறது. வாகனங்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி நுழைவு வாயில்கள், சாலைகள் அமைய இருக்கிறது. கட்டண முறையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். இதுசம்பந்தமாக அனுமதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மிகவும் பழுதடைந்துள்ள 190 கடைகளை முழுவதுமாக இடித்து விட்டு, புதிதாக கூடிய 231 கடைகள், 2 பொதுக்கழிவறைகள், ஏ.டி.எம். மையம், உணவகம், காத்திருப்பு அறை ஆகியவை கட்டப்பட்ட உள்ளன. இந்த கடைகளின் மேல்தளத்தில் 137 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும். இதற்கு ரூ.29 கோடி ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
(பாக்ஸ்)சேறும், சகதியுமான வாகன நிறுத்துமிடம்
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஊட்டி நகராட்சியில் மக்கள் தொகை 88,422 பேர் ஆகும். தற்போதைய நிலவரப்படி ஊட்டியில் 1,13,753 பேர் உள்ளனர். இது மட்டுமின்றி தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியை பொறுத்தவரை ஏ.டி.சி., மார்க்கெட் பகுதி, காந்தல் முக்கோணம், என்.சி.எம்.எஸ்., அசெம்பிளி தியேட்டர், திபெத்தியன் மார்க்கெட் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வசதி உள்ளது.
இதில் அதிக வாகனங்களை நிறுத்தக்கூடிய ஏ.டி.சி. மைதானம் மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அங்கு வாகனங்கள் நிறுத்த வசதி கிடையாது. அதை தவிர்த்து சாலையில் மட்டும் தான் வாகனங்கள் நிறுத்த முடியும். எனவே, ஊட்டியில் வாகன நிறுத்துமிட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.