குளத்திற்குள் கார் பாய்ந்ததில்பேக்கரி கடை ஊழியர் காயம்
கழுகுமலையில் குளத்திற்குள் கார் பாய்ந்ததில் பேக்கரி கடை ஊழியர் காயம் அடைந்தார்.
கழுகுமலை:
கோவில்பட்டி ராமையா நகர் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 42). இவர் கழுகுமலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரும், கடை ஊழியருமான கோவில்பட்டி புதுக்கிராமம் அந்தோணிசாமி மகன் பாலா (40) என்பவரும் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ஜெயப்பிரகாஷ் ஓட்டினார். கழுகுமலை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்பை உடைத்து கொண்டு சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குளத்தில் தண்ணீர் வற்றி குறைவாக இருந்ததால் கார் மூழ்காமல் தப்பியது. இதில் ஜெயப்பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அவருடன் வந்த ஊழியர் பாலா காயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், மாரியப்பன் சம்பவ இடத்திற்கு ெசன்று, காயமடைந்த பாலாவை மீட்டு சிகிச்சைக்காக கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.