குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது? என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் உதயமாகி 38 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்த நிலையிலும் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டமாகவே நீடிக்கிறது.
தாமிரபரணி குடிநீர் திட்டம்
விவசாயத்திற்கு மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள நிலையில் குடிநீருக்கு பெரும்பாலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பி உள்ள நிலை இன்றும் நீடிக்கிறது. பொதுவில் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் குடிப்பதற்கு உகந்த வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டர் என்ற வகையில் வினியோகம் செய்யப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்களே நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வந்தது. விருதுநகரை பொருத்தமட்டில் கல்குவாரிகள் குடிநீர் தேவைக்கு கை கொடுத்து வந்தன. இந்தநிலையில் மாவட்டத்தில் வைப்பாற்றில் குழி தோண்டி மாட்டு வண்டிகளில் குடிநீர் எடுத்து வந்த சாத்தூர் மக்களுக்காக முதன்முறையாக சீவலப்பேரியிலிருந்து தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
65 லிட்டர் தண்ணீர்
விருதுநகருக்கு கடந்த 1989-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த ஆனைகுட்டம் அணையும், காருசேரி கல்குவாரியும் இதனை தொடர்ந்து ஒண்டிப்புலி கல்குவாரியம் குடிநீர் தேவைக்கு பயன்பாட்டிற்கு வந்தது. சிவகாசி பகுதியில் வெம்பக்கோட்டை அணை ஓரளவு கை கொடுத்தது. கடந்த 2004-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விஷன் 2004 என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கும், மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதிக்கும் வல்லநாடு பகுதியில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்து ரூ.68 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளுக்கு தினசரி 65 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க வசதி செய்து தரப்பட்டது. ஆனாலும் இந்த குடிநீர் திட்டத்திற்கு தனி மின் பாதை அமைக்கப்படாததால் மின்தடை மற்றும் குழாய் உடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தின் கீழ் தாமிரபரணி குடிநீர் கிடைப்பதில் தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் 40 முதல் 50 சதவீதம் குடிநீரே கிடைக்கும் நிலை தொடர்கிறது.
தேவை பூர்த்தி செய்யப்படவில்லை
இதேபோன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிக்கு கடந்த 2004-ம் ஆண்டு மானூர் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. ஏற்கனவே இருந்த நீர் ஆதாரங்களுடன், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டமும் கூடுதலாக பயன்பாட்டிற்கு வந்தாலும் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளுக்கு வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் இத்திட்டத்தின் பயன்பாடு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்த போதிலும் நகர்ப்புற மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் நகர் பகுதியில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் 10 முதல் 15 நாட்கள் வரை உள்ளதை குறைக்க நகராட்சி நிர்வாகத்தினரால் இயலாத நிலைநீடிக்கிறது.
கூடுதல் திட்டம்
இந்தநிலையில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளுக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.447 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிக்கப்பட்டு திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் திட்ட பணி முழுமையாக முடிவடையாத நிலை உள்ளது.
வரும் ஜூன் மாதத்திற்குள் கூடுதல் கூட்டுக் குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் விருதுநகர் நகராட்சி பகுதியில் ஏற்கனவே குடிநீர் தேவைக்கு கை கொடுத்து வந்த ஆனைகுட்டம் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் உப்புநீராக உள்ளதால் மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி நகர் மக்கள் புகார் கூறும் நிலை தொடர்கிறது. நகராட்சி நிர்வாகமும் ஏதும் செய்ய இயலாத நிலையில் தாமிரபரணி கூடுதல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு தான் முழுமையாக நகரில் தாமிரபரணி குடிநீர் வினியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.
நடவடிக்கை எப்போது?
ஆனாலும் அதுவரை எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நான்கு வழிச்சாலை பணியின் போது தடைபட்ட ஒணடிப்புலி கல்குவாரி குடிநீர் வினியோகம் இன்னும் தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது.
மாவட்டத்தில் 450 கிராம பஞ்சாயத்துகளில் அடங்கிய 1,800 கிராமங்கள் உள்ள நிலையில் இந்த கிராமங்கள் அனைத்திற்கும் நிலத்தடி நீர் ஆதாரமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்தநிலையில் பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலையில் இதனை சீரமைக்க போதிய நிதி ஆதாரமில்லாத நிலையில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தவிக்கும் நிலையும் நீடிக்கிறது.
மத்திய அரசு கிராம பகுதிகளில் வீடுகளுக்கு இலவசமாக குழாய் மூலம் குடிநீர்வழங்கும் ஜல்ஜீவன்திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் நடப்பு நிதியாண்டிற்கு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடும் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் இத்திட்ட பணி நிறைவேற்றப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்கிறது. மொத்தத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது.
பிரச்சினைக்கு தீர்வு
அதிலும் சில கிராமப்பகுதிகளில் மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை இன்னும் நீடிக்கிறது. இதேபோன்று நகர்ப்புற மக்கள் இன்னும் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலையும் தொடர்கிறது. அவ்வாறு வாங்கப்படும் குடிநீரின் தரமும் உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. எது எப்படி ஆயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்தாலும் இதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதுகுறித்து மாவட்ட மக்கள் கூறும் கருத்துகள்:-
20 நாட்களுக்கு ஒரு முறை
திருத்தங்கல் பார்வதிபிச்சை:-
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் தற்போது 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் உள்ளது. இந்த நீரை பிடித்து சிக்கனமாக பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு வைக்கும் போது 5 நாட்களுக்கு பின்னர் குடிநீரில் புழுக்கள் உருவாகி விடுகிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் தண்ணீரை பயன்படுத்தும்போதும் தண்ணீரை சூடாக்கி குடித்து வருகிறோம். ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பணை
விளாமரத்துப்பட்டி தங்கமாரி:-
வெம்பக்கோட்டை அருகே வைப்பாறு ஓடினாலும் விளாமரத்துபட்டி சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
மேலும் வெம்பக்கோட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்திலிருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
விருதுநகர் மாவட்டம் உதயமாகி 38 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்த நிலையிலும் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டமாகவே நீடிக்கிறது.
கோவிலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாரி:-
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களிலும், நகர் பகுதியில் வாரத்துக்கு ஒரு முறையும், 15 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில இடங்களில் குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது. இதை சிலர் அலட்சியப்படுத்தி குடிநீரை வீணாக சாலையில் விடுகிறார்கள். அதேபோல ஒரு சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுக்கின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைவெளி நாட்கள்
முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன்:-
விருதுநகரில் ஆனைகுட்டம் குடிநீரின் தரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில் கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வல்லநாடு தாமிரபரணி கூட்டுக் குடிநீர்திட்டத்திலிருந்து கூடுதல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரில் வினியோக மண்டலங்களை குறைத்து குடிநீர் வினியோக இடைவெளி நாட்களையும் குறைக்க வேண்டும்.
சுழற்சிமுறை
அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்த உண்ணாமலை:-
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36- வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இதில் ஒரு சில இடங்களில் மேடான பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வது தாமதமாகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் குடிநீரை விலை கொடுத்து வெளியே வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேடான பகுதிகளில் குழாய் பதிக்கும் போது ஆழமாக தோண்டி குழாய் பதிக்க வேண்டும். மேலும் பெரும்பாலும் குடிநீர் உப்பு கலந்த சுவையுடன் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ெமாத்தத்தில் குடிநீர் வினியோக நாட்களை குறைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோாிக்கை ஆகும்.