ஆற்றில் குளித்த கல்லூரி மாணவரின் கதி என்ன?

ஜேடர்பாளையத்தில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவரை நாமக்கல் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2022-06-12 18:55 GMT

பரமத்திவேலூர்:

பெங்களூரு சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீதர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்துள்ளார். சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவிற்காக நேற்று அதே ஊரைச் சேர்ந்த 11 பேருடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் சென்றுள்ளார். படுகை அணை காவிரி ஆற்றுபகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது ஸ்ரீதர் தண்ணீரில் மூழ்கி திடீரென்று காணாமல் போய் உள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் ராஜா வாய்க்காலில் குளித்த போது காணாமல் போன கல்லூரி மாணவரை நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் நேற்று மாலை வரை தேடியுள்ளனர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு துறையினர் சென்று விட்டனர். மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜா வாய்க்காலில் காணாமல் போன கல்லூரி மாணவரை தேடும் பணி நடைபெறும் என ஜேடர்பாளையம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்