கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் எந்த நிலையில் இருக்கிறது? அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இணைப்பு சாலை பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2023-07-27 07:11 GMT

சென்னை, 

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் சி.எம்.டி.ஏ. கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் அப்பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பஸ்கள் நெரிசலின்றி செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகளாக அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பஸ் நிறுத்துமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைய உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் போலீஸ் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, "இணைப்பு சாலைகள், போலீஸ் நிலையம், மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களுக்கான மருத்துவ சேவை கூடம் ஆகிய பணிகள் முழுமையாக முடிந்த பிறகு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்