நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறப்புக்கு காரணம் என்ன? - வைகோ கேள்விக்கு மந்திரி பதில்

புலிகள் பாதுகாக்கப்படும் வனப்பகுதியில், கேமரா பொறுத்தப்பட்டு, கண்காணிப்பு அமைத்து விரிவான பாதுகாப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-21 13:32 GMT

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறப்புக்குக் காரணம் என்ன என்று எழுப்பிய கேள்விக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே பதிலளித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கேள்வி:

(அ) தமிழ்நாட்டின் நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் அண்மையில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறந்தது உண்மையா?

(ஆ) அப்படியானால், குட்டிகள், பெரிய புலிகளின் உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் இறப்புக்கான காரணங்களை விசாரிக்க ஏதேனும் குழு அமைக்கப்பட்டுள்ளதா?

(இ) இந்தப் புலிகளின் இறப்புக்கான காரணங்களை விசாரிக்கும் போது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா?

(ஈ) அதிக எண்ணிக்கையிலான புலிகள் திடீரென இறப்பதற்கான காரணங்கள் என்ன?

(உ) இயற்கைக்கு மாறான மரணங்களைத் தடுப்பதற்கும், இப்பகுதியில் உள்ள வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே பதில்:

(அ) மாநில அறிக்கையின்படி, நீலகிரி மாவட்டத்தில் 16.08.2023 முதல் 19.09.2023 வரை பத்து புலிகள் இறந்துள்ளன.

(ஆ) ஆம், நீலகிரியில் புலிகள் இறந்ததற்கான காரணங்களைக் கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

(இ) மற்றும் (ஈ) ஆம். குழுவின் அறிக்கையின்படி காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

(1) பட்டினியால் 6 புலிக் குட்டிகளும், புலிகள் உள் சண்டை காரணமாக இரண்டு வயது முதிர்ந்த புலிகளும் இறந்துள்ளன.

(2) அவலாஞ்சி பகுதியில் விஷம் வைத்த காரணமாக இரண்டு புலிகள் இறந்தன. குற்றவாளி ஏற்கனவே வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

(உ) இயற்கைக்கு மாறான மரணங்களைத் தடுப்பதற்கும், இப்பகுதியில் உள்ள வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கும் கட்டமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை பின்வருமாறு:-

1. புலிகளின் நடமாட்டம் மற்றும் அவை வாழும் நில பயன்பாட்டு மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், எதிர்காலத்தில் மோதலை தடுக்கவும் செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்.

2. புலிகள் பாதுகாக்கப்படும் வனப்பகுதியில், கேமரா பொறுத்தப்பட்டு, கண்காணிப்பு அமைத்து விரிவான பாதுகாப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3. மனிதர்கள் வாழும் பகுதியில் புலிகள் நடமாட்டம் குறித்து அண்மையில் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புலிகளின் நடமாட்டம் எப்போது நிகழ்கிறது, மக்களால் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நிலைமை ஆழமாகப் பகுப்பாய்வு செய்யப்படும்.

4. இதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க உள்ளூர் அல்லது பஞ்சாயத்து அளவில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலிகள் - மனித மோதலைக் குறைக்க, வனத்துறையின் வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்