காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

Update: 2023-08-08 08:16 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் கலந்து கொண்டார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.27 ஆயிரத்து 360 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, காஞ்சீபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்