57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ; கலெக்டர் வழங்கினார்

தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.

Update: 2023-07-03 18:45 GMT

தென்காசி,

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், தனித்துணை கலெக்டர் ஷீலா, ஆதிதிராவிடர் நல அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 358 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 17 வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கிற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்துக்கான காசோலைகளையும், 15 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 500 மதிப்பிலான காதொலி கருவிகளையும், 19 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 500 மதிப்பிலான மின் கலன் பொருத்திய சக்கர நாற்காலிகளையும், ஆதி திராவிட நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் திராவிட தமிழர் கட்சியை சேர்ந்த சிவசைலம் கல்யாணிபுரம் அருந்ததியர் தெருவை சேர்ந்த நாட்டாண்மை கண்ணன் ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், "எங்களது தெருவில் பேச்சியம்மன் கோவில் கட்டி பல ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். இக்கோவிலுக்கு மின் கட்டணம் மற்றும் அரசால் வழங்கப்பட்ட நிதியில் முன் மண்டபத்தில் கூரை ஷெட் அமைத்து கோவில் விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த கோவிலுக்கு பட்டா இல்லை. எனவே இதுகுறித்து கள விசாரணை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்