பா.ஜ.க. தலைவர் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்களால் பரபரப்பு

பா.ஜ.க. தலைவர் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-16 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் தரணி முருகேசன். நேற்று இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு கேணிக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அவருடன் சில தொண்டர்களும் சென்று வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு 8 மணி அளவில் 2 மர்ம நபர்கள் அவரின் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றனர். இதனை கண்ட தொண்டர்கள் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முரணாக பேசினர். அவர்களை சோதனையிட்டபோது 2 பெரிய வாள், கத்திகள் வைத்திருந்ததை கண்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்க முயன்றபோது ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் இருவரும் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், தரணி முருகேசனை தாக்கும் எண்ணத்துடன் வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. தொண்டர்கள் கேணிக்கரை 4 முனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்