விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய பொறுப்புடன் செயல்படுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'சாலை பாதுகாப்பு மாதம்' வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது ,
சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு சனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை "தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்" அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாடு அரசின் "விபத்தில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் (Accident Hot Spots) கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.
சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தனி மனித நடத்தை, ஓட்டுநரின் உளவியல் நிலை, பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலையின் அமைப்பு, சுற்றுப்புற சூழல் போன்றவைகளே சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணிகள் என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், தற்போதைய மற்றும் வருங்கால சாலை உபயோகிப்பவர்களிடையே பாதுகாப்பான சாலைப் பயனாளர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை
வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "இன்னுயிர் காப்போம் : நம்மைக் காக்கும் 48" என்ற சீர்மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில், சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காய மடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த சாலைப்பாதுகாப்பு மாதத்தில், அரசானது வாகனத்தை இயக்கிவரும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது.
உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலைப் பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்.
சாலை விதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே !! விதிகளை மதிப்போம்! வேதனைகளைத் தவிர்ப்போம் !! சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு. என தெரிவித்துள்ளார்.