'கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
சென்னை,
தமிழகத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 21-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது.
இதன்படி இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.
குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, தவறுகள் நடைபெறுவது இயல்பு என்றாலும், தி.மு.க. ஆட்சியில் தவறுகள் நடைபெறும் நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், பொள்ளாச்சி மற்றும் கொடநாடு விவகாரங்களில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றும் எதிர்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கொடநாடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகள் குறித்து முதல்-அமைச்சர் விளக்கமளித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் இருந்த இடத்தில் நடைபெற்ற விவகாரம் என்பதால் இது சாதாரண விவகாரம் அல்ல என்றும், கொடநாடு வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கி தருவோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.