'முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்'
எந்த சூழ்நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
தமிழக அரசு சார்பில், முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 152 அடியாக உயர்த்தியே தீருவோம். தென்தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பென்னிகுயிக்கிற்கு லண்டனில் சிலை வைத்து உலகம் முழுவதும் தெரிய வைத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து பிரச்சனைகளையும் தீர்வு காண்போம். பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும். எந்த சூழ்நிலையிலும் அணைக்கான உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.