நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் -ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம். அ.தி.மு.க. தானாகவே எங்களிடம் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பாக பேசினார்.

Update: 2023-08-20 23:13 GMT

சென்னை,

மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டி இருந்தார். சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மஹாலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியின் அவைத்தலைவரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிர்வாகிகளான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், 'மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு இல்லை. வீழ்ச்சி மாநாடு' என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் 'புரட்சி தமிழன்' பட்டம் வழங்கப்பட்டதையும் கடுமையாக விமர்சித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியின் சட்ட விதிகளை யார் பறித்தாலும் அதை எதிர்த்து கேட்பதற்குதான் 2-வது தர்ம யுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். திருச்சியில் நாம் நடத்திய மாநாடு எழுச்சியுடன் இருந்தது. டெல்லியே நம்மை திரும்பி பார்த்தது. இந்த கூட்டம் மூலம் தொண்டர்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து காட்டினோம்.

வருகிற காலம் தேர்தல் காலமாக இருக்கிறது. நமக்கு பொறுப்புகள் இருக்கிறது. 'பூத்' கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். கிளை கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். அமைப்பு ரீதியான நிர்வாகிகளை ஒரு மாதத்துக்குள் நீங்கள் (மாவட்ட செயலாளர்கள்) நியமிக்க வேண்டும்.

ஒன்றரை கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டோம் என்று அவர்கள் (எடப்பாடி பழனிசாமி) பொய்யான தகவலை பரப்புகிறார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் வெல்ல போவது நாம்தான். தானாகவே அ.தி.மு.க. நம்மிடம் வந்து சேரும். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த போகிறோம். தொண்டர்கள், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி மீது தாக்கு

மதுரை மாநாடா அது? 3 நாட்களுக்கு முன்னால் தயாரித்த புளிசாதத்தை போட்டு இருக்கிறார்கள். ஒரு கூட்டத்தை முறைப்படுத்தும் நிர்வாக திறன் கூட இல்லாதவர்கள் அங்கு குழுமி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பின்னர் அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது. கொங்கு மண்டலத்திலேயே வெற்றி பெற முடியவில்லை. 50 ஆண்டுகளாக வரலாறு படைத்த இயக்கத்தை படுபாதளத்தில் தள்ளிய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மாக்கள் மன்னிக்காது.

நாம்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை வருகிற காலத்தில் நீங்கள்தான் உருவாக்க வேண்டும். செப்டம்பர் 3-ந் தேதி காஞ்சீபுரம் கூட்டத்தில் சந்திப்போம். இந்த கூட்டம் முடிந்தவுடன் எல்லா மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் மாநில மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்