கரும்பு ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்

கரும்பு நிலுவை தொகை முழுவதையும் வழங்காவிட்டால், கரும்பு ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Update: 2022-12-21 19:01 GMT

ராமநத்தம்,

வேப்பூர் அருகே சித்தூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 80 கோடிக்கு மேல் வழங்காமல் உள்ளது. இந்த நிலுவை தொகையை வழங்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதேபோல், ஆலை நிர்வாகத்துடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடமல் போனது.

இந்த நிலையில் நேற்று, தொழுதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.இதில், ஆலை நிர்வாகம் தரப்பில் முழுதொகையும் கொடுக்காமல் ரூ. 12 கோடி கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர்.

காத்திருப்பு போராட்டம்

அப்போது, விவசாயிகள் சார்பில் பேசிய அய்யாக்கண்ணு நாங்கள் கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மட்டுமே கேட்கிறோம். அதற்கு வட்டி கேட்கவில்லை. எனவே உடனடியாக முழு தொகையையும் வழங்க வில்லை என்றால், ஆலை முன்பு மற்றும் ஆலை நிர்வாகத்தின் முதலாளியின் வீட்டு முன்பும், உரிய அனுமதியை பெற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

2 நாட்களில் காலஅவகாசம்

இதற்கு ஆலை நிர்வாகத்தினர் 2 நாட்கள் கால அவகாசம் தேவை என்று கூறினர். இதையடுத்து கூட்டத்தில் எந்த முடிவும் ஏற்படாமல், விவசாயிகள் கலைந்து சென்றனர். இதில் ஆலை நிர்வாகம் சார்பில் முதன்மை கரும்பு ஆலோசகர் கந்தசாமி, துணை இயக்குனர் அன்பு ரத்தினம், உதவி பொது மேலாளர் ஜானகிராமன், விவசாயிகள் சார்பில் சக்தி வேல், கவியரசு, ராஜா, ஸ்டாலின், கிருஷ்ணமூர்த்தி, சின்னசாமி உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்