முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி இருந்தோம் - பாதிக்கப்பட்ட பொதுமக்கள்

முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஒரு நாள் முழுவதும் வீடுகளுக்குள் முடங்கி இருந்தோம். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அவதிக்குள்ளானோம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2022-11-14 07:52 GMT

சுற்று சுவரால் பதிப்பு

இந்த நிலையில் மழை நீரில் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம் திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியம் தெருவை சேர்ந்த கனிமொழி கூறியதாவது:-

நாங்கள் 2003-ம் ஆண்டில் இருந்து இங்கு வசித்து வருகிறோம். தற்போது இங்கு தேங்கி உள்ள தண்ணீரின் அளவு, 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட மிகவும் அதிகமாக உள்ளது. அருகில் உள்ள ஆறுமுகம் நகர் வழியாக மழைநீர் அடையாறு ஆற்றில் கலக்கும். ஆனால் அங்கு செல்லும் பகுதியில் சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் இங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அண்ணா நகரில் உள்ள எனது தாயாரின் வீட்டுக்கு புறப்பட்டு செல்கிறோம். எனது மகள் பிரியங்கா 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனால் அவரது படிப்பு பாதிக்கப்படுகிறது. இந்த பகுதி மக்களின் நலன் கருதி மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டுக்குள் முடங்கினோம்

திருவள்ளுவர் நகரை சேர்ந்த குகநாத பாண்டியன்:-

ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த பகுதியில் மழைநீர் தேங்குகிறது. ஆனால் இந்த முறை மிகவும் அதிகமாக தேங்கி உள்ளது. மியாட் ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள அடையாற்று தண்ணீர் கால்வாய் வழியாக எல் ஆன்ட் டி காலனி, ஆறுமுகம் நகர் வழியாக மீண்டும் அடையாற்றில் சென்று கலக்கிறது.

நேற்று முன்தினம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டதால் அடையாறு ஆற்றில் இருந்து அதிகபடியான தண்ணீர் இந்த பகுதிக்குள் வந்துள்ளது. மழை நீர் தேங்கியதால் ஒரு நாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி இருந்தோம். தற்போது, எனது குழந்தைக்கு பால் மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக வந்தேன். காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டுள்ளோம்.

200-க்கும் மேற்பட்டோர் மீட்பு

மதுரவாயல் தீயணைப்பு நிலைய அதிகாரி எஸ்.செல்வன்:-

பொதுமக்களிடம் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து மதுரவாயல், விருகம்பாக்கம், பூந்தமல்லி, கிண்டி, சைதாப்பேட்டை தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 5 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு படையினர் வந்துள்ளோம். திருவள்ளுவர் நகர் முழுவதும் சுமார் 13 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 3 முதல் 3½ அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் ரப்பர் படகுகள் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடு மற்றும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

விருகம்பாக்கம் பகுதிகளில்...

தொடர் மழை காரணமாக சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நகர், சாய்பாபா காலனி, தாரா சந்த் நகர், இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்பு குறித்து வெங்கடேஸ்வரா நகரில் வசிக்கும் சியாமளா என்பவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். இதற்கு காரணம் இதே பகுதியில் உள்ள மேட்டுக்குப்பம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பு இருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதி ஆகும். ஆனால், அங்கு மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக ராட்சத பம்ப் செட் நிரந்தரமாக வைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. அது எங்கள் பகுதி வழியாக வழிந்தோடுகிறது. ஆனால், எங்கள் பகுதியில் இருந்து மழைநீரை வெளியேற்ற சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இல்லை.

இதனால், எப்போதும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் 2 பள்ளிக்கூடங்கள் உள்ளன. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்