நாம் தமிழர் கட்சியினர் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ;ஈடுபட்டனர்.
விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். கரூர் நாடாளுமன்ற செயலாளர் சசிகுமார், விராலிமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் சைமன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விராலிமலை தாலுகா மலம்பட்டி, மாங்குடி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகமாக நடைபெறுவதாகவும், இதனால் விவசாயிகளும், வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. பேராம்பூர் பெரிய குளத்தின் மதகுகள் சேதமடைந்து பல வருடங்கள் ஆகியும் அதனை இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்யவில்லை. விராலிமலையில் குடிநீர் பிரச்சினை சரிசெய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை தாசில்தார் சதீஸ், இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாளை (அதாவது இன்று) இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.