சாதி, மத பேதமின்றி பழக வேண்டும்

சாதி, மத பேதமின்றி பழக வேண்டும் என்று வால்பாறையில் நடந்த மனித நேய வார விழாவில் மாணவர்களுக்கு, சப்-கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Update: 2023-01-29 18:45 GMT

வால்பாறை

சாதி, மத பேதமின்றி பழக வேண்டும் என்று வால்பாறையில் நடந்த மனித நேய வார விழாவில் மாணவர்களுக்கு, சப்-கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மனித நேய வார விழா

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார விழா நடைபெற்றது. இதில் வால்பாறை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். விழாவிற்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி பேசும்போது, சாதி, மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற உணர்வோடு ஒற்றுமையாக அன்பை பரிமாறிக்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். இதை பள்ளி பருவம் முதலே அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த செயலை வலியுறுத்துவதற்காகவே மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது என்றார்.

கலைநிகழ்ச்சிகள்

இதையடுத்து வால்பாறை, சிங்கோனா, உபாசி ஆகிய ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஓவிய போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனித்தாசில்தார் தணிகைவேல் தலைமையில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இதில் வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்