'ஆன்லைன் சூதாட்டத்துக்கு வாங்கிய பணத்தை கொடுக்காததால் கொன்றோம்'

பொள்ளாச்சியில் வாலிபரை கொன்று உடல் புதைக்கப்பட்ட சம்பவத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு வாங்கிய பணத்தை கொடுக்காததால் கொன்றோம்' என்று கைதான அவரது நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2023-08-17 21:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வாலிபரை கொன்று உடல் புதைக்கப்பட்ட சம்பவத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு வாங்கிய பணத்தை கொடுக்காததால் கொன்றோம்' என்று கைதான அவரது நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண் கார்த்திக் (வயது 24). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண் கார்த்திக், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உடனே அவரது பெற்றோர், பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, கடைசியாக சந்திராபுரம் பகுதியில் இருந்ததும், நண்பர்களான சூரியபிரகாஷ் (26) மற்றும் அரவிந்த்(23) ஆகியோருடன் பேசியதும் தெரியவந்தது. உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அருண் கார்த்திக்கை கொலை செய்து, சந்திராபுரம் கல்குவாரியில் புதைத்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

பின்னர் 2 பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கொலை செய்ததை அவர்கள் நடித்து காண்பித்தனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட அருண் கார்த்திக்கின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் வினோத் தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர். மேலும் தாசில்தார் ஜெயசித்ரா, உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார், வருவாய் துறையினர் உடனிருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அருண் கார்த்திக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாக்குமூலம்

இதைத்தொடர்ந்து அருண் கார்த்திக் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி சூரியபிரகாஷ், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்போது, அருண் கார்த்திக் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு சூரியபிரகாஷிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கினார். இந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் சம்பவத்தன்று அருண் கார்த்திக், சூரியபிரகாஷ், அரவிந்த் ஆகியோர் சந்திராபுரம் கல்குவாரி பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே சூரியபிரகாஷ், அரவிந்த் சேர்ந்து அருண்கார்த்திக்கை கல்லால் தாக்கி கொலை செய்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளும், சூரியபிரகாஷின் மோட்டார் சைக்கிளும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் சூரியபிரகாஷின் மோட்டார் சைக்கிள் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அருண் கார்த்திக்கை கொலை செய்த பிறகு அவரது மோட்டார் சைக்கிளின் நெம்பர் பிளேட்டை எடுத்துவிட்டு சூரியபிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளின் நெம்பர் பிளேட்டை அதில் பொருத்தி ஓட்டி வந்துள்ளார். இதனால் அந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்