வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விடக்கோரிகீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விடக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-30 21:48 GMT

சென்னிமலை

வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விடக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்க்காலுக்குள் இறங்கி...

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருகிற 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கீழ்பவானி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று சென்னிமலை அருகே புங்கம்பாடி பிரிவு வாய்க்கால் பகுதியில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலுக்குள் இறங்கி நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் திறந்துவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி சண்முகம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தின் அரசாணை எண் 276-ஐ ரத்து செய்ய வேண்டும். வருகிற 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதற்கான அரசாணையை முன்கூட்டியே அரசு வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆண், பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்