அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோர்ட்டு உத்தரவுபடி அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

Update: 2023-11-04 21:45 GMT

அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் டோபிகானா, தாய் மூகாம்பிகை சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளது கணக்கிடப்பட்டு அவற்றை அகற்ற, பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 20 கடைகள், 10 வீடுகளை வருவாய் மற்றும்- பொதுப்பணித் துறையினர் இடித்து அகற்றினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சிலர் வீடுகளை காலி செய்தனர். அவர்களுக்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் கட்டப்பட்டுள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே இருந்தனர்.

இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவுபடி அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அதன்பேரில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, தாம்பரம் கோட்டாட்சியர் பரிமளாதேவி, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தாம்பரம் மாநகர போலீஸ் இணை கமிஷனர் மூர்த்தி, தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன், 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-க்கும் மேற்பட்டோர், பல்லாவரம் குன்றத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

நேற்று 40 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். இன்னும் ஒரு வாரத்தில் 700 ஆக்கிரமிப்பு வீடுகளும் முழுவதுமாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்