மாமல்லபுரம் கடற்கரை கோவில் அகழி கிணற்றில் நீர் மட்டம் உயர்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் உள்ள அகழி கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

Update: 2023-08-12 10:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்த கடற்கரை கோவில் வளாகத்தில் தெற்கு திசையில் பல்லவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் வணிக பயன்பாட்டுக்காக படகுதுறை அமைந்துள்ளது.

இந்த படகு துறையில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி அழகுற காட்சி அளிக்கும். அதேபோல் கடற்கரை கோவில் வளாகத்தில் வடக்கு திசையை நோக்கி வராக சிற்பத்தின் மைய பகுதியில் பழங்கால தரை மட்ட கிணறு ஒட்டி உள்ளது. குறுகிய விட்டத்துடன் இந்த கிணறு அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில் வழிபாடு இருந்த நேரத்தில் விஷ்ணு, சிவன் வீற்றிருக்கும் இந்த கோவில் வளாகத்தில் சாமி அபிஷேக தீர்த்தத்திற்காக இந்த கிணறு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொல்லியல் துறையினர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றில் அகழாய்வு செய்தபோது தரை மட்டத்தின்கீழ் பாறை வெட்டு கற்களில் படிகளுடன் தொட்டி அமைப்பு உள்ளதை கண்டறிந்தனர். மாமல்லபுரம் கடல் பகுதியில் இந்த கோவில் உள்ளதால் கடல் அலைகள் கரையை நோக்கி பெருக்கெடுத்து சில மாதங்கள் முன்னோக்கி வரும்.

அப்போது கடற்கரை மேற்பரப்பிற்கு இணையாக கிணற்றில் நீரூற்று பெருகி தரைமட்டம் வரை உயரும்.கடல் உள்வாங்கும் காலத்தில் கிணற்றின் நீர் மட்டம் பல அடி ஆழத்திற்கு குறைந்துவிடும். கிணற்று பகுதியிலிருந்து 50 மீட்டம் தொலைவில் கடல் இருந்தும் இந்த கிணற்றில் நன்னீர் கிடைப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

பழங்காலத்தில் பாறை கற்களில் வட்ட வடிவ உறை செதுக்கி, நிலத்தடி நீர் உள்ள பகுதி வரை நிலத்திற்குள் இறக்கி கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை கோவில் கிணற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறித்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகளிடம் சந்தேகம் கேட்டு பார்த்து ரசித்துவிட்டு செல்வதை காண முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்