வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பருத்தி விவசாயம் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-04 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

பருத்தி பயிர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வைகை தண்ணீர் பாயும் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நெல்விவசாயம் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நெல் பயிரிட்ட விவசாயிகள் செய்வதறியாது திகைத்து அரசின் நிவாரணம் மற்றும் பயிர்காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர். இதனிடையே நெல்பயிர்களை பாதியிலேயே அறுத்துவிட்டு அதில் பணப்பயிரான பருத்தியை பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டனர்.

டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய பருத்தி சாகுபடி ஓரளவு நன்றாக விளைந்து வந்ததை தொடர்ந்து விவசாயிகள் பருத்தியை பறிக்க தொடங்கி வருகின்றனர். முதல்போக அறுவடை செய்த விவசாயிகள் அடுத்தடுத்த அறுவடையை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆண்டைபோல அதிக விலை கிடைக்காவிட்டாலும் கைவிடவில்லை என்று நிம்மதியுடன் விவசாயிகள் இருந்தனர்.

தொடர் மழை

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பருத்தி பயிரிட்டுள்ள பகுதிகளில் வயல்வெளிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. பருத்தி செடிகளை சுற்றிலும் மழைவெள்ளநீர் இருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருஉத்தரகோசமங்கை, பனைக்குளம், நல்லாங்குடி, மேலசீத்தை, தேர்த்தங்கல், காவனூர் என அனைத்து பகுதிகளிலும் பருத்தி செடிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பருத்தி விவசாயி துரைராஜ் கூறியதாவது:- கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் பருத்தி விவசாயம் செய்திருந்தோம். முதல் அறுவடை நன்றாக கிடைத்த நிலையில் தற்போது மழை பெய்து வயல்வெளிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பருத்தி செடிகளின் வேர் அழுக தொடங்கி உள்ளது.

ராமேசுவரம்

பருத்தி நனைந்து பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பருத்தி காய்கள் உதிர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு பெய்யாமல் கெடுத்த மழை தற்போது பெய்து கெடுத்து வருகிறது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

ராமேசுவரத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதயைடுத்து கோவில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்