காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-21 18:34 GMT


காங்கயத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

காங்கயம்- பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி நுழைவு வாயில் பகுதியில் நேற்று முன்தினம் காலை காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கான வேலைகள் நடைபெற்றது. அதற்கான குழி தோண்டும் பணி குடியிருப்பு நுழைவாயில் முன்பு நடைபெற்றது. பின்னர் மாலை நேரம் ஆகியும் பணிகள் முடிவடையாத நிலையில் தோண்டப்பட்ட குழி மூடாமல் இருந்தது.

இதன் காரணமாக தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சிரமத்திற்கு உள்ளான அப்பகுதி மக்கள் திடீரென நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழி மூடப்பட்டது

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கூறி விரைவில் பணியை முடித்து வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் வாகன போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை நகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவாக முடித்து, தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்