துர்நாற்றத்துடன் வெளியேறும் தண்ணீர்

காரைக்குடி நாட்டார் கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீர் துர்நாற்றத்துடன் வெளியேறுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-12-01 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி நாட்டார் கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீர் துர்நாற்றத்துடன் வெளியேறுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிரம்பி செல்லும் தண்ணீர்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள நாட்டார் கண்மாய் சுமார் 60 ஏக்கர் பரப்பு கொண்ட கண்மாய் ஆகும். சுற்று வட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வரும் தண்ணீர் இந்த கண்மாயை வந்தடையும். இது நிரம்பி மறுகால் சென்று அதன் அருகே உள்ள கண்மாய்கள் நிரம்பி இறுதியில் தேனாற்றில் கலக்கும்.

இந்நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் இந்த கண்மாயை தூர்வாரியதால் கடந்தாண்டு பெய்த மழை காரணமாக இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அப்போது காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் நிரம்பி சென்ற தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இந்தாண்டு கண்மாயில் அதலை செடிகளும், புதர்களும் மண்டி கிடப்பதால் தற்போது கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் துர்நாற்றத்துடன் சாக்கடையோடு வெளியேறி வருகிறது.

துர்நாற்றம்

இதுதவிர ஒருவித ரசாயனம் கலந்து வெளியேறுவதால் நுரையுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த தண்ணீரில் குளிப்பதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:- கடந்தாண்டு தூர்வாரப்பட்டு கண்மாய் நிரம்பி வெளியேறும் தண்ணீர் சுத்தமாக இருந்ததால் விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தோம். ஆனால் இந்தாண்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதுதவிர ரசாய தன்மையுடன் கூடிய தண்ணீரும் கலந்து வெளியேறுவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இந்த கண்மாயை பொதுப்பணித்துறை சார்பில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்